உத்திர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிங்கு சிங் ரஹி. 2022-ஆம் ஆண்டுத் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். இதையடுத்து, கடந்த 2025 ஆண்டு ஜூலை 28 அன்று ஷாஜகான்புர் மாவட்டத்திற்குத் துணை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார். அன்றைய தினம் அலுவலக வளாகம் அசுத்தமாக இருப்பதாக எழுந்த புகாருக்கு, அவர் தார்மீக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை உறுதிப்படுத்தும் விதமாகத் தோப்புக்கரணம் போட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, சம்பவம் நடந்த 36 மணி நேரத்திற்குள் அவர் லக்னோவில் உள்ள வருவாய் ஆணையத்திற்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 31, 2026 அன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து, “பணிகளில் தாம் ஓரம் கட்டப்பட்டதாகவும், உத்தரப்பிரதேச வருவாய் வாரியத்தில் எந்தவிதமான மக்கள் சேவைப் பொறுப்புகளும் வழங்கப்படாமல், வெறும் இணைப்புப் பணியில் மட்டும் தான் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். தான் உரிய ஊதியம் பெற்று வந்தபோதிலும், தனக்கு எவ்விதப் பணிகளும் அல்லது பொறுப்புகளும் ஒதுக்கப்படாத நிலையில், வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவதும் ஒரு வகையான ஊழல் என்றும், அது நிர்வாக அமைப்பின் தார்மீகத் தோல்வி” என்றும் குற்றம் சாட்டினார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ரிங்கு, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு, மாநில குடிமைப் பணியில் (பிசிஎஸ்) பணியாற்றினார். அப்போது, ​​2009-ஆம் ஆண்டில் சமூக நலத்துறையில் நடைபெற்ற 83 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழலை அவர் வெளிக்கொண்டு வந்தார். அவர் அந்த ஊழலை அம்பலப்படுத்தியதன் விளைவாக, அவர் மீது கொடூரமான கொலை முயற்சி நடத்தப்பட்டது. அதில் அவர் ஏழு முறை சுடப்பட்டார்.
இத்தாக்குதலில் அவர் முகம் சிதைந்துபோனதுடன், ஒரு கண்ணின் பார்வையையும் இழந்தார். மன உளைச்சல் இருந்தபோதிலும், அவர் 2021-ல் மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டின் கீழ் இந்தியக் குடிமைப் பணி (யுபிஎஸ்சி) தேர்வில் தேர்ச்சி பெற்றார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டும் தனது முயற்சிகளைத் தொடர்ந்து எதிர்த்து வரும், ஒரு அமைப்புக்கு எதிரான நீண்டகாலப் போராட்டத்தில், அவரது இந்த ராஜினாமாவே இறுதி அடியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரது ராஜினாமா குறித்து நாகினா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர சேகர் ஆசாத் போன்ற அரசியல் பிரமுகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். தற்போதைய நிர்வாக அமைப்பிற்குள் நேர்மையான அதிகாரிகள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் அவர் சுட்டிக்காட்டினர்.
