அ.ம.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பழனிசாமியும், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தினகரனும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
தே.ஜ., கூட்டணியில் தினகரனின் அ.ம.மு.க.,வும் உள்ளது. ஆனாலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், தினகரனும் பரஸ்பரம் ஆதரித்து பிரசாரம் செய்வதை தவிர்த்து வந்தனர்.
இதுகுறித்து, கடந்த 3ம் தேதி நம் நாளிதழின் தேர்தல் களம் பகுதியில், ‘ஊருக்கு பங்காளி; உள்ளுக்குள் பகையாளி’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது.
இதையடுத்து, பழனிசாமி தன் பயணத் திட்டத்தை மாற்றி, சென்னை சைதாப்பேட்டையில் போட்டியிடும் அ.ம.மு.க., வேட்பாளர் செந்தமிழனுக்கு ஆதரவாக நேற்று பிரசாரம் செய்தார். அதேபோல், தினகரனும் தன் பிரசாரத்தில் மாற்றம் செய்து, மதுரவாயல் அ.தி.மு.க., வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், ‘ஜெயலலிதா மறைவுக்கு பின், பழனிசாமி – தினகரன் இடையே கடுமையான மோதல் இருந்தது. அதை சரிசெய்து, இருவரையும் கூட்டணிக்குள் கொண்டு வர, பா.ஜ., – ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கடுமையாக முயன்றதன் விளைவாக தான், கூட்டணி அமைந்தது.
ஆனால், உள்ளுக்குள் பகையை வைத்துக் கொண்டு, இருவரும் பரஸ்பரம் ஆதரித்து பிரசாரம் செய்வதை தவிர்த்தனர். இந்த விஷயம், டில்லி தலைவர்கள் கவனத்துக்கு சென்றது. அவர்களின் பேச்சுக்கு பின்னர்தான், இருவரும் மனம் மாறி, தற்போது ஆதரவாக பிரசாரம் செய்ய துவங்கி உள்ளனர்’ என்றனர்.
