சென்னை : ‘காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்களை போலீசார் கைது செய்தனர் .
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5ம் தேதி முதல் தமிழகம் முழுதும் மாவட்ட அளவில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கடந்த 11ம் தேதி, சென்னை எழிலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றாம் நாளாக நேற்று, சேப்பாக்கம், வாலாஜா சாலையில், 250க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஊராட்சி செயலர்கள்
தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு 15,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி செயலர்கள் கடந்த 5ம் தேதி முதல் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று ஒன்பதாம் நாளாக, சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே, தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில், ஊராட்சி செயலர்கள் 2,000க்கும் அதிகமானோர், நுாதன முறையில் மடிப்பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் களைப் போலீசார் கைது செய்தனர்.
சத்துணவு ஊழியர்கள்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காலமுறை ஊதியம் வழங்குவது உட்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியர்கள் 11ம் நாளாக, நேற்று காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுதும், நேற்று நடந்த போராட்டத்தில், 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். அவர்கள் ஒப்பாரி வைத்தும், கருப்பு உடை அணிந்தும், அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
சென்னை, தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் டெய்சி தலைமை வகித்தார்.
போராட்டத்தால், மாநிலம் முழுதும், 10,000க்கும் அதிகமான சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள், கடந்த 11 நாட்களாக மூடப்பட்டு உள்ளன. மேலும், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தால், குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், குறைந்தபட்ச உதவித் தொகையாக, மாதம் 6,000 ரூபாய் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று நான்காம் நாளாக, மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுதும் சாலை மறியலில் ஈடுபட்ட 7,000க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கம் சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் குறைப்பு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள், ஒன்பதாம் நாளாக நேற்று சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
