நேற்றைய போராட்டம்: கிராம உதவியாளர்கள் 'காத்திருப்பு' தொடர்கிறது: மின் வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னை எழிலகம் வளாகத்தில் நேற்று, 26வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில், கிராம உதவியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்கள் தங்களுக்கு, நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, பிப்., 5ம் தேதி முதல் போராட் டம் நடத்தி வருகின்றனர்.

26வது நாளாக நேற்று, சென்னை எழிலகம் வளாகத்தில், அச்சங்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமையில், 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுதும் உள்ள கலெக்டர் அலுவலகங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பணியின்போது உயிரிழக்கும் ஊ ழியர்களின் குடும்பத்திற்கு ஒதுக்கப்படும் பணி நியமனங்களை, 5 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அலுவலர்கள், பணியை புறக்கணித்து, 7வது நாளாக நேற்று, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் குடும்ப நல வாரியம் அமைக்க வலியுறுத்தி, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வழித்தோன்றல் வாரிசுகள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இலவச வீட்டு மனைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஞானவேல் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மின் வாரிய பணியாளர்கள் ‘கிளாஸ் 1 மற்றும் 2 அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு கிடையாது’ என்ற அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னை மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

களப்பிரிவு பணியாளர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட அனைத்து நிலை பணியாளர்களும் காலை அலுவலகம் வந்தால், நள்ளிரவு வரை பணியில் உள்ளனர். எனவே தான், அனைவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

தற்போது, ஊதிய உயர்வு முன்மொழிவில், கிளாஸ் 1, 2ல் பணிபுரியும் அதிகாரிகளுக்கு, ஊதிய உயர்வு கிடையாது என்பதை ஏற்க முடியாது. அதை நிர்வாகம் திரும்ப பெற்று, பாரபட்சமின்றி அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link