அபுஜா: நைஜீரியாவில் கிராமம் ஒன்றில் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்., பயங்கரவாதிகள், பெண்கள் குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோரை கடத்திச் சென்றுள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம், ஐ.எஸ்., உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் சமீபகாலமாக பைக்குகளில் சென்று கிராமங்களைத் தாக்குவதும், பள்ளி குழந்தைகள், பெண்களை கடத்துவதும் அதிகரித்துள்ளது.
சில தினங்களுக்கு முன், நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் கொண்டுகா, மார்டே, ஜகானா, மைனோக் உள்ளிட்ட பல கிராமங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், அதே மாகாணத்தில் நகோஷே என்ற ஊரில் புகுந்து பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர்கள், அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
