நைஜீரியா சுரங்கத்தில் நச்சு வாயு கசிவால் 38 பேர் பலி

அபுஜா: நைஜீரியாவில் உள்ள கனிம சுரங்கத்தில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவில் சிக்கி 38 பேர் பலியாகினர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் பிளாட்டோ மாகாணத்தின் வாஸ் என்ற பகுதியில், கனிம சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு வழக்கமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, திடீரென நச்சு வாயு கசிவு ஏற்பட்டது. போதிய காற்றோட்டம் இல்லாத காரணத்தால் இதை சுவாசித்த தொழிலாளர்களில் 38 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், சுரங்கத்தில் திடீரென வெளியேறிய சல்பர் மற்றும் மோனாக்சைடு போன்ற நச்சு வாயுக்களை தொழிலாளர்கள் சுவாசித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 35 வயதுக்குட்பட்டோர் என தெரிகிறது. இதையடுத்து சுரங்கத்தை மூடவும், விபத்து குறித்து விரிவான விசாரணைக்கும் நைஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Source link