பங்குனி உத்திரத்திருவிழா; அய்யனார் கோயில் குதிரை சிலைக்கு குவிந்த மாலைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி தூக்கி நேர்த்திக்கடன் செய்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டனர்.

மேலும், தீர்த்த திருவிழாவை முன்னிட்டு கீரமங்கலம் கிராமத்தின் சார்பில் சுவாமிக்கு பட்டு சீர் கொண்டு செல்லும் நிகழ்வு சிவன் கோயிலில் இருந்து வான வேடிக்கை, மேளதாளம், நாட்டிய குதிரைகளுடன் கிராமத்தினர் ஊர்வலமாக கொண்டு சென்றனர். பட்டு, சீர் வந்த பிறகு தீர்த்த திருவிழா நடந்தது. அதே போல குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் முன்பு அமைந்துள்ள பிரமாண்ட குதிரை சிலைக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் காகித மாலைகள் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி ஆலயத்தில் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கும் சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்கார அபிசேகங்களும் செய்யப்பட்டது. 

Source link