வ ரி விதிப்பு முறையில் செய்யப்பட்ட மாற்றங்களை தொடர்ந்து, நிறுவனங்கள் தங்கள் பங்குகளை, பொதுமக்களிடமிருந்து திரும்ப பெறும் ‘பை – பேக்’ நடைமுறையில், பங்குச் சந்தை வாயிலாக வாங்கும் முறையை மீண்டும் கொண்டு வர செபி ஆலோசித்து வருகிறது.
புதிய வரி திருத்தங்களின்படி, ஏப்., 1, 2026 முதல் பை – பேக் வாயிலாக பங்குகளை விற்கும் பங்குதாரர்களே மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டும். இதனால், பை – பேக் மற்றும் திறந்த சந்தை விற்பனைக்கு இடையிலான வரி வேறுபாடு நீங்கி உள்ளது.
முன்னதாக, பங்குதாரர்களை சமமாக நடத்துவதில் இருந்த சிக்கல்கள் காரணமாக, 2025 ஏப்., முதல் பங்குச் சந்தையில் பங்குகளை திரும்ப பெறும் நடைமுறை நிறுத்தப்பட்டது. தற்போது, அந்த சிக்கல்கள் சரியாகியுள்ள நிலையில், இம்முறையை மீண்டும் அறிமுகப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்தால், சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்து, பங்குகளின் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த நிறுவனங்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்மொழிவு குறித்து பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஏப்., 23 வரை கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
