புதுடில்லி: தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் ஒரு பகுதியாக, பசுமை அமோனியா மற்றும் பசுமை மெத்தனாலுக்கான புதிய தரநிலைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன் வாயிலாக, இந்தியாவில் பசுமை எரிபொருள் சார்ந்த வர்த்தகத்தை வேகப்படுத்தவும், உலகளவிலான உற்பத்தி மையமாக நம் நாட்டை மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை, கடந்த 2023 ஜனவரி மாதம் 19,744 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இதற்கான முறையான தர நிர்ணய அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
இதில், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட பசுமை ஹைட்ரஜன் வாயிலாக தயாரிக்கப்படும் அமோனி யாவையும், மெத்தனாலையும் ‘பசுமை’ என வகைப்படுத்துவதற்கு தேவையான, பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும், பூமியின் வெப்பத்தை அதிகரிக்க செய்யும் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் வெளியேற்ற அளவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
