பசுமை தாமிர உற்பத்தி ஆலை: அரசு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு

சென்னை: துாத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க, அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடியில் பசுமை முறையில் தாமிரம் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க அனுமதி கோரி, கடந்த மாதம் 9ம் தேதி, வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்தது.

அதை, தமிழக அரசு நிராகரித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வேதாந்தா நிறுவனம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதாடியதாவது:

விண்ணப்பத்தின் அடிப்படையில், ஆலையை ஆய்வு செய்யும் முன், நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை. விண்ணப்பத்தை நிராகரிக்கும் முன், உரிய விளக்கமளிக்க வும் அவகாசம் வழங்க வில்லை. இது, விதிகளுக்கு முரணானது.

எனவே, பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் துறை, கனிம வளத்துறை நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து, ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள் , இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி, தமிழக அரசு மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டனர்.

மேலும், பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் துறை, கனிம வளத்துறை மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபுணர்கள் குழு அமைப்பது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

Source link