டேராடூன்: ”நாட்டின் வடக்கு பகுதியில் நிலவிய எல்லைப் பிரச்னையை தீர்க்க, சீனாவுடன் பஞ்சசீல ஒப்பந்தத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு விரும்பியிருக்கலாம்; இருப்பினும், அந்த பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது’ என, முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, 1954ல் சீனாவுடன் பஞ்சசீல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஆக்கிரமிப்பு
ஒருவருக்கொருவர் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு பரஸ்பர மரியாதை அளித்தல், ஆக்கிரமிப்பு இல்லாமை, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை, சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை, அமைதியான சகவாழ்வு ஆகிய ஐந்து கொள்கைகளை இந்த ஒப்பந்தம் அடிப்படையாக கொண்டிருந்தது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்பும், சீனாவுடனான எல்லைப் பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பதாக முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்டின் டேராடூனில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: கடந்த 1954ல், திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா அங்கீகரித்தது; இரு நாடுகளும் பஞ்சசீல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம், வடக்கு எல்லைப் பிரச்னை தீர்ந்துவிட்டதாக அப்போதைய பிரதமர் நேரு நினைத்தார்.
இதற்காகவே, பஞ்சசீல ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். ஷிப்கி லா, மானா, நீதி, கிங்க்ரி – பிங்க்ரி, லிபுலேக், தர்மா ஆகிய ஆறு மலைப்பகுதி வழியாக வர்த்தகம் மற்றும் யாத்திரை நடைபெறும் என இந்தியா எண்ணியது.
நம் நாட்டை ஆண்ட பிரிட்டிஷார் வெளியேறிய பின், சுதந்திர இந்தியாவின் எல்லையை அமைப்பது தொடர்பாக இந்தியா ஒரு சில முடிவுகளை எடுத்தது.
உரிமை
கிழக்கு எல்லைப் பகுதியில், மெக்மஹோன் எல்லைக் கோடு இருப்பதை நேரு அறிந்திருக்கலாம். லடாக் பகுதிலும் ஏதோ ஒரு உரிமை இருந்தது. அதனால்தான், பஞ்சசீல ஒப்பந்தத்தை ஏற்க அவர் விரும்பியுள்ளார்.
சீனாவும், திபெத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் உரிமை கோரியது. இதனால், இரு நாட்டுக்கான எல்லைப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. இமயமலை அடிவாரத்தில் இருநாட்டு எல்லைக் கோடு இன்றும் பதற்றமாகவே உள்ளது. இதன் வாயிலாக, பஞ்சசீல ஒப்பந்தம் எல்லை நிலைப்பாட்டுடன் சம்பந்தமற்றது என்பதை சீனா தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
