'படிக்காத மேதை படைத்த பள்ளிக்கூடம்' – பழ வியாபாரியின் பத்மஸ்ரீ பயணம் தெரியுமா?

“எனக்குப் படிக்கத் தெரியாததால்தானே எனக்கு இந்த அவமானம் நேர்ந்தது? என் கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் இருந்திருந்தால் நான் படித்திருப்பேனே”

Hajabba

ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் எழுந்து வேலைக்குச் செல்லும்போது, “நமக்கு இன்னும் வசதிகள் இருந்திருக்கலாமோ” என்றோ அல்லது “நம்மால் இவ்வளவுதான் முடியும்” என்றோ பல நேரங்களில் பலர் நினைப்பதுண்டு.

ஆனால், எதுவுமே இல்லாத மனிதர் ஒருவர் நினைத்தால் ஒரு ஊரின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்பதற்கு வாழும் உதாரணம், கர்நாடகாவைச் சேர்ந்த ஹரேகளா ஹஜப்பா (Harekala Hajabba).

ஆரஞ்சு பழங்களைச் சுமந்து, தனியாளாக விற்று, ஒரு பள்ளிக்கூடத்தையே உருவாக்கிய இந்தச் சாதாரண மனிதரின் கதை, உங்களின் இன்றைய தினத்தைச் சிறப்பாகத் தொடங்க ஒரு மிகச்சிறந்த உந்துதலாக இருக்கும்.

Hajabba
Hajabba

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள `நியூபடுப்பு” (Newpadupu) என்ற குக்கிராமம்தான் ஹஜப்பாவின் சொந்த ஊர். அந்த ஊரில் பள்ளிக்கூடம் என்ற ஒன்றே கிடையாது. வறுமையின் காரணமாக ஹஜப்பாவும் பள்ளிக்கூடத்துப் பக்கம் சென்றதில்லை.

மங்களூர் நகரப் பேருந்து நிலையத்தில் ஒரு கூடை நிறைய ஆரஞ்சு பழங்களைச் சுமந்து சென்று விற்பதுதான் அவருடைய தினசரி பிழைப்பு. ஒரு நாளைக்குச் சுமார் 150 ரூபாய் வரை மட்டுமே வருமானம் கிடைக்கும்.

ஒருநாள், வெளிநாட்டவர் இருவர் ஹஜப்பாவின் கூடையிலிருந்த பழங்களைப் பார்த்துவிட்டு, ஆங்கிலத்தில் அதற்கான விலையைக் கேட்டனர். ஹஜப்பாவிற்கு ஆங்கிலம் புரியவில்லை. அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று தெரியாமல் ஹஜப்பா திருதிருவென முழிக்க, அந்த வெளிநாட்டவர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டனர்.

அந்தச் சம்பவம் ஹஜப்பாவின் மனதை வெகுவாகப் பாதித்தது. “எனக்குப் படிக்கத் தெரியாததால்தானே எனக்கு இந்த அவமானம் நேர்ந்தது? என் கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் இருந்திருந்தால் நான் படித்திருப்பேனே. எனக்கு நேர்ந்த இந்த நிலைமை என் ஊரில் உள்ள எந்தக் குழந்தைக்கும் வரக்கூடாது,” என்று அந்த நிமிடத்தில் ஒரு சபதம் எடுத்தார்.

ஒரு நாளைக்கு 150 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் ஒருவரால் பள்ளிக்கூடம் கட்டுவது என்பது சாதாரண கனவு அல்ல. இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால் பலரும் அந்தப் பேச்சை காதுகொடுத்துக் கூட கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால் ஹஜப்பாவின் வைராக்கியம் பெரிதாக இருந்தது.

Hajabba
Hajabba

அன்றிலிருந்து தான் சம்பாதிக்கும் அந்தச் சிறிய தொகையிலிருந்து ஒரு பகுதியைத் தன் கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகச் சேமிக்கத் தொடங்கினார். பல வருடங்கள் அந்தச் சேமிப்பு தொடர்ந்தது.

ஆரம்பத்தில் தன் ஊரில் உள்ள ஒரு சிறிய மசூதியின் நிர்வாகிகளிடம் பேசி, அங்குள்ள ஒரு சிறிய அறையில் 28 குழந்தைகளுடன் ஒரு தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார்.

அதன்பிறகு, ஊர் மக்களின் சிறு உதவிகளோடும், தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கொண்டும் தன் கிராமத்திலேயே ஒரு நிலத்தை வாங்கி, 2004-ஆம் ஆண்டு `தட்சிண கன்னடா ஜில்லா பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளி’ என்ற அரசாங்கப் பள்ளியைக் கட்டி முடித்தார்.

பள்ளிக்கூடம் கட்டியதோடு ஹஜப்பா நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாளும் அந்தப் பள்ளிக்குச் சென்று, வகுப்பறைகளைக் கூட்டிச் சுத்தம் செய்து, பள்ளியின் பராமரிப்பு வேலைகளையும் அவரே தன் கைகளால் செவ்வனே செய்து வந்தார். அந்த ஊர் மக்கள் அவரை `அட்சர சந்த்’ (எழுத்துச் சித்தர் / Saint of Letters) என்று அன்போடு அழைக்கத் தொடங்கினார்கள்.

அவரது இந்த தன்னலமற்ற மாபெரும் சேவையை அங்கீகரிக்கும் வகையில், 2020-ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான `பத்மஸ்ரீ‘ விருதை அறிவித்தது.

Hajabba
Hajabba

விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் கூடியிருந்த அந்த மாபெரும் சபையில், ஒரு சாதாரண வெள்ளைச் சட்டை, வேட்டி அணிந்து, காலில் செருப்பு கூட இல்லாமல் வெறும் காலோடு நடந்து சென்று அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டார் ஹஜப்பா. அந்த ஒரு காட்சி ஒட்டுமொத்த இந்தியாவையும் எழுந்து நின்று கைதட்ட வைத்தது.

நமக்குத் தேவையான வளங்கள் இல்லை, பின்புலம் இல்லை, நேரம் இல்லை என்று பல காரணங்களை நாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், எதைக் கண்டும் சோர்வடையாமல் தன்னிடம் இருந்ததை மட்டுமே வைத்து ஒரு மாபெரும் கல்விப் புரட்சியைச் செய்துள்ளார் ஒரு பழ வியாபாரி. எந்த ஒரு பெரிய மாற்றமும், ஒரு தனி மனிதனின் சிறிய முடிவில் இருந்தே தொடங்குகிறது என்பதற்கு ஹஜப்பா ஓர் உதாரணம்.

Hajabba
Hajabba

உங்களின் இன்றைய நாள், ஹஜப்பாவைப் போல ஒரு சிறிய, ஆனால் உறுதியான முன்னெடுப்போடு தொடங்கட்டும்!

Source link