படுகொலை வழக்கில் 'மாஜி' முதல்வர் மகன் குற்றவாளி; 23 ஆண்டுகளுக்கு பின் அதிரடி தீர்ப்பு

பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில், 2003ல் நடந்த தேசியவாத காங்., தலைவர் ராமவதார் ஜக்கி படுகொலை வழக்கில், அம்மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகியை, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் நேற்று குற்றவாளி என அறிவித்தது. மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் இருந்து, கடந்த 2000ல், சத்தீஸ்கர் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2000 – 2003 டிசம்பர் வரை காங்கிரஸ் கட்சி சார்பில் அம்மாநிலத்தின் முதல், முதல்வராக அஜித் ஜோகி பதவி வகித்தார். அதன் பின், காங்கிரசில் இருந்து விலகி, 2016ல் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் என்ற பெயரில் தனிக்கட்சி துவங்கினார்.

இதற்கிடையே அவர் முதல்வராக இருந்தபோது, ராய்பூரில் கடந்த 2003 ஜூன் 4ம் தேதி அம்மாநில தேசியவாத காங்., மூத்த தலைவர் ராமவதார் ஜக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லபட்டார்.

விடுதலை

அப்போதைய தேசியவாத காங்., மாநில தலைவர் வி.சி .சுக்லாவுக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட நிலையில், அவரது படுகொலை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவம் தொடர்பாக முதலில் மாநில போலீசார் விசாரணை நடத்தினர். 2003 டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்., தோல்வி அடைந்து, பா.ஜ., ஆட்சியை பிடித்ததும், 2004, ஜனவரியில் வழக்கு சி.பி.ஐ., வசம் மாற்றப்பட்டது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கு விசாரணையை தீவிரப்படுத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகிக்கு இக்கொலையில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, மொத்தமாக 29 பேர் மீது ராய்பூர் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், 2007, மே 31 அன்று விசாரணை நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில், அரசு தரப்பு குற்றவாளிகள் 28 பேர் மீதான குற்றம் நிரூபிக்கபட்டதாகவும், அமித் ஜோகி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவரை மட்டும் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாகவும் அறிவித்தது.

இதை எதிர்த்து சி.பி.ஐ., தரப்பில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், மிக தாமதமாக மேல் முறையீடு செய்யப்பட்டதாக 2011ல் சி.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சத்தீஸ்கர் மாநில அரசு, ராமவதார் ஜக்கியின் மகன் சதீஷ் ஜக்கி ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை கூட உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றப்பத்திரிகை

இந்தச் சூழலில், சி.பி.ஐ., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அமித் ஜோகியின் விடுதலையை எதிர்த்து, சி.பி.ஐ., புதிதாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் முதல் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்த ஆதாரங்கள், குற்றப்பத்திரிகை ஆகியவற்றை பரிசீலனை செய்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா, நீதிபதி அர்விந்த் குமார், அமித் ஜோகியை விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, அவரை குற்றவாளி என அறிவித்தனர்.

அத்துடன் அடுத்த மூன்று வாரங்களுக்குள் அவர் உயர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Source link