சிவகாசி: “பட்டாசு தொழிலுக்கு புதிய அங்கீகாரம் அளித்து தொழில்துறை வரையறைக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிவகாசியில் இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
சிவகாசியில் உள்ள மத்திய பெட்ரோலியம் எரிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகமான ‘பெசோ’வில், வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
கடந்த, 2023க்கு முன் இருந்தது போல் பெசோ உரிமத்துக்கு சிவகாசியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
கடந்த 2008ன் வெடிபொருள் கட்டுப்பாட்டு விதியில் திருத்தம் செய்து பட்டாசு தொழிலுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் 5,000 கிலோ அளவிலான பட்டாசுகளை இருப்பு வைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு எடுத்து நடத்துவதற்கான சட்டப்பூர்வ விதிகளை உருவாக்க வேண்டும். 2008 வெடிபொருள் பாதுகாப்பு விதியில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றம் கொண்டுவர வேண்டும்.
கிடப்பில் போடப்பட்டுள்ள பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகளை, விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
சல்பரை வேதிப்பொருள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும். பேன்சி ரக பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும்.
பண்டிகை காலத்துக்கு மூன்று மாதத்துக்கு முன்பே தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். விதிமீறல் காரணமாக தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகள், மீண்டும் இயங்க அனுமதி வழங்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பட்டாசு தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். பட்டாசு தொழிலில் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில், அரசு முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
