சென்னை: தமிழகத்தில், எஸ்.சி., – எஸ்.டி., சமூக மக்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா மட்டும் வழங்கப்படுகிறது; ஆனால், நிலம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வீடற்ற எஸ்.சி., – எஸ்.டி., மக்களுக்கு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு நிலம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில், 3 சென்ட்; பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில், 1.5 சென்ட்; மாநகராட்சியில், ஒரு சென்ட் வரை வீடு கட்ட நிலம் வழங்கப்படுகிறது.
அடிப்படை வசதி
இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் பகுதிகளில், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சாலை வசதி, குடிநீர், மின் கம்பங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்நிலையில், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ், எஸ்.சி., – எஸ்.டி., சமூக மக்களுக்கு வெறும் பட்டா மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதற்கான நிலம் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், இச்சமூக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதன்படி, சிவங்கை மாவட்டம் குன்றக்குடியில், 73 நரிக்குறவர்கள்; திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில், 11 அருந்ததியர்கள் உட்பட, தமிழகம் முழுதும் 50-0க் கும் மேற்பட்ட எஸ்.சி., – எஸ்.டி., குடும்பத்தினருக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் பட்டா மட்டும் வழங்கப்பட்டு உள்ளது. அதற்கான நிலம் கிடைக்காமல் தவித்து வருவதாக, அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தவிப்பு
இது குறித்து, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளி ராஜு கூறியதாவது: கடந்த 2023ல், அமைச்சர் பெரியகருப்பன் பட்டா வழங்கிய பின், ஆ.தெக்கூர் பகுதியில் நிலம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின், அங்கிருந்து வேறு இடம் மாற்றினர். அதற்கான பட்டாவை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்; ஆனால், அங்கும் நிலம் வழங்கப்படவில்லை.
மீண்டும் அங்கிருந்து, குன்றக்குடி பகுதியில் இடம் ஒதுக்கப்படுவதாக கூறி, பட்டா வழங்கப்பட்டது. தற்போது அங்கும் இடம் கிடைக்காமல், வேறு இடம் பார்ப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சிவகங்கையில் மட்டும், 3,000க்கும் அதிகமானோர் நிலம் கிடைக்காமல் தவித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
