பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது லாபம் தருமா?

பங்குச்சந்தையில் என்.எஸ்.இ., எனும் தேசிய பங்குச் சந்தை பட்டியலிடப்படுவதற்கான முயற்சிகளில் இருக்கும் நிலையில், அதன் பங்குகள் ஏற்கனவே சந்தைக்கு வெளியே கைமாறி வருவதாக கூறப்படுகிறது. தேசிய பங்குச் சந்தை மட்டுமல்ல; இந்தியாவில் பட்டியலிடப்படாத 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள், அதிகாரப்பூர்வ பங்குச் சந்தைக்கு வெளியே பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.

பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகளை பொதுமக்கள் நேரடியாக பங்குச் சந்தையில் வாங்கவோ; விற்கவோ முடியாது. இருப்பினும், சில ஆன்லைன் தளங்கள், தனியார் புரோக்கர்கள் மற்றும் ‘ஆப் -மார்க்கெட்’ பரிவர்த்தனைகள் மூலம் இப்பங்குகள் கைமாறுகின்றன.

எதிர்காலத்தில் நிறுவனம் ஐ.பி.ஓ., வாயிலாக பட்டியலிடப்பட்டால், அதிக லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே, முதலீட்டாளர்களின் இந்த ஆர்வத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஆனால், இவ்வகை முதலீடுகளில் பல அபாயங்கள் உள்ளன. தேவையான நேரத்தில் பங்குகளை விற்க முடியாத நிலை, போதிய அளவில் வாங்குபவர்கள் இல்லாததால் பணத்தை மீட்டெடுக்க முடியாத சிக்கல் போன்றவை முக்கியமானவை.

மேலும் இந்த சந்தை, செபியின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாததால், விலை நிர்ணயத்தில் வெளிப்படை தன்மை குறைவாக இருக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் உண்மையான மதிப்பை விட அதிக விலையில் பங்குகளை வாங்கும் அபாயம் உள்ளது.

பட்டியலிடப்பட்ட பின்னர் பங்கு விலை குறைந்தால், முன்கூட்டியே அதிக விலையில் வாங்கிய முதலீட்டாளர்கள் நஷ்டம் அடையும் சூழலும் ஏற்படலாம்.

இதற்கு உதாரணமாக, பட்டியலிடப்படாத நிலையில் என்.எஸ்.டி.எல்., பங்கு 1,100 ரூபாய் வரை வர்த்தகமானதாக கூறப்பட்டாலும், அதன் ஐ.பி.ஓ., விலை 800 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, பட்டியலிடப்பட்ட முதல் நாளில், 880-க்கு மட்டுமே வர்த்தகமானது.

இந்த சந்தை வேகமாக வளர்ந்து வருவதால், முதலீட்டாளர் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளன. இதை ஒழுங்குபடுத்த, சட்டரீதியான அதிகாரம் செபிக்கு உள்ளதா என்பது குறித்து, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாக செபி தெரிவித்துள்ளது.

பட்டியலிடப்படாத நிறுவனங்களின் சந்தையை ஒழுங்குபடுத்தினால், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

ஆழம் தெரியாமல் காலை விடுவது பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது என்பது, ஆழம் தெரியாமல் காலை விடுவது போன்றது. ஏற்கனவே, பங்குச் சந்தைகளில் ஏராளமான நிறுவனங்கள் வெளிப்படையான விதிமுறைகளுடன் வர்த்தகமாகி வரும் நிலையில், இந்த ஒழுங்கற்ற வர்த்தகத்தை தவிர்ப்பதே சிறந்தது . – நாகப்பன், நிறுவனர், ஓரியன்டல் ஸ்டாக்ஸ்

Source link