சென்னை: ‘பட வாய்ப்பு இல்லாததால், நானும், தோழி அஞ்சு கிருஷ்ணாவும் சினிமா பிரபலங்களுக்கு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டோம்’ என, நடிகை வின்சி நிவேதா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை மாநகர போலீசில் செயல்படும், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், சில மாதங்களுக்கு முன், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இவர்கள், சினிமா பிரபலங்களுக்கு போதைப் பொருள் விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. தற்போது, சினிமா நடிகையர் அஞ்சு கிருஷ்ணா, 30, வின்சி நிவேதா, 26 உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அறிமுகம் இவர்களில், வின்சி நிவேதா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:
என் சொந்த ஊர் தர்மபுரி. எம்.சி.ஏ., கணினி அறிவியல் படித்துள்ளேன். சினிமா மீதான மோகத்தில் நடிகை மற்றும் இயக்குநராக வேண்டும் என, 2021ல் சென்னைக்கு வந்தேன்.
குறும்பட இயக்குநர்ஒருவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவர் தான் எனக்கு, ‘பவுடர்’ என, அழைக்கப்படும் ‘மெத் ஆம்பெட்டமைன், கோகைன்’ உள்ளிட்ட போதைப் பொருட்களை உபயோகிக்கும் பழக்கத்தை அறிமுகம் செய்தார்.
அதன் பின், இத்தகைய போதைக்கு நான் அடிமை ஆனேன். குறும்பட இயக்குநர், என்னை பல இயக்குநர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் மூலம், சினிமாவில் துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
என் தேவைக்காக போதைப் பொருள் விற்பர்களை தேடி அலைந்தேன். அப்போது இயக்குநர் ஒருவர் மூலம், கேரள மாநிலத்தைச் சேர்ந்த விபின்ஷா, 27, என்பவரின் நட்பு கிடைத்தது.
இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, ‘மெத் ஆம்பெட்டமைன்’ கடத்தி வந்து என்னிடம் விற்று வந்தார். நாளடைவில் அவரும் நானும், போதைப் பொருள் விற்கும் கூட்டாளிகளாக மாறினோம்.
சென்னையில் நடந்த இரவு மது விருந்து ஒன்றில், நடிகை அஞ்சு கிருஷ்ணா எனக்கு அறிமுகம் ஆனார். அவர், வெள்ளிமலை என்ற படத்தில் நடித்து இருந்தார்; கேரளாவிலும் ‘மாடலிங்’ தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இவருக்கும் எனக்கும் பட வாய்ப்புகள் குறைந்தன. ஒரு கட்டத்தில் அன்றாட செலவுக்கு கூட, கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.
நெருங்கிய நட்பு அஞ்சு கிருஷ்ணாவுக்கு, சினிமா பிரபலங்கள் அதிகமானோர் அறிமுகமாகி இருந்தனர். பட வாய்ப்பு தொடர்பாக அவர்களுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தார். இதனால், அவரையும் போதைப் பொருள் விற்பனையில் களமிறக்கினோம்.
போதைப் பொருள் விற்பதற்காகவே, சென்னை, வடபழனியில் வாடகை வீடு எடுத்து தங்கினோம். எங்களின் படுக்கை அறை மெத்தைக்கு கீழ் தான், மெத் ஆம்பெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைப்போம்.
விபின்ஷாவுக்கு சென்னையில் நண்பர்கள் அதிகம். அவர் வாயிலாகவும் போதைப் பொருள் விற்று வந்தோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
