பண்ருட்டி: பண்ருட்டி அருகே, 1300 ஆண்டு பழமையான சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம்,

பண்ருட்டி: பண்ருட்டி அருகே, 1300 ஆண்டு பழமையான சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி, கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் மற்றும் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெற்றிவேல், சாமுவேல், மதகடிப்பட்டு சட்டக் கல்லுாரி மாணவர் சரவணன், முனைவர் பட்ட ஆய்வாளர் ராகுல் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது பூமியின் மேற்பரப்பில் பழங்காலத்தை சேர்ந்த சுடுமண் ஆண் உருவ பொம்மை மற்றும் தேய்ந்த நிலையில் உள்ள பெண் உருவ பொம்மைகளை கண்டெடுத்தனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கூறியதாவது:

பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த தலை மட்டுமே உள்ள ஆண் உருவ பொம்மை தலையின் உயரம், 12 செ.மீ., தலையில் தலைப்பாகையும், சிரித்த முகத்துடன் உள்ளது. அக்கடவல்லி தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த பெண் உருவ பொம்மையின் உயரம் 16.5 செ.மீ. பெண் உருவ சுடுமண் பொம்மை முற்றிலும் தேய்ந்த நிலையில் உள்ளது. சுடுமண் பொம்மைகளின் காலம் கி.பி., 10 மற்றும் 13 ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்.

தென்பெண்ணை ஆற்றங்கரை களஆய்வில் ஏற்கனவே 10 க்கும் மேற்பட்ட சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோரம் பழங்கால மக்கள் வாழ்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link