பதஞ்சலி நிறுவனத்திற்கு அதிர்ச்சி; சுங்க வரி விதிப்பில் அதிரடி தீர்ப்பு

– டில்லி சிறப்பு நிருபர் –

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, சுங்க வரி விதிப்பதில் நிலவி வந்த நீண்ட கால சட்டச் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.

யோகா குரு ராம்தேவின், ‘பதஞ்சலி புட்ஸ்’ நிறுவனம் 2001ல் வெளிநாட்டில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்தது. சுங்க வரி சோதனைகள் முடிந்து, கிடங்கில் இருந்து பயன்பாட்டுக்காக வெளியே எடுக்கும் முன், பாமாயிலுக்கான சுங்க வரி மதிப்பீட்டு விலையை மத்திய அரசு உயர்த்தியது.

சுங்க வரி என்பது, பொருட்கள் கிடங்கிற்கு வந்த தேதியின் அடிப்படையில் விதிக்க வேண்டுமா, அல்லது கிடங்கில் இருந்து வெளியே எடுக்க அனுமதிக்கப்படும், ‘அவுட் ஆப் சார்ஜ்’ ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியின் அடிப்படையில் விதிக்கப்பட வேண்டுமா என்ற சட்ட சிக்கல் எழுந்தது.

இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சுங்க வரிச் சட்டப் பிரிவு 68-ஐ சுட்டிக்காட்டி முக்கிய தீர்ப்பை வழங்கியது.

அதில், ‘சுங்கத் துறை அதிகாரி ஒருவர், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கும், ‘அவுட் ஆப் சார்ஜ்’ ஆணை பிறப்பிக்கும் தேதியே வரியைத் தீர்மானிக்கக் கூடியது; பொருட்கள் கிடங்கிற்கு வந்த தேதியோ அல்லது வெளியே எடுக்கப்படும் தேதியோ கணக்கல்ல’ என, தெளிவுப் படுத்தியது.

கேரள உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து, பதஞ்சலி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இம்மனு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், ‘கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட, எந்த முகாந்திரமும் இல்லை’ என கூறி, பதஞ்சலி நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதன் மூலம், ‘சுங்க வரி விதிப்புக்கு, ‘அவுட் ஆப் சார்ஜ்’ ஆணையே முக்கியமானது’ என, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வரி விவகாரங்கள் குறித்த வழக்குகளுக்கு உதாரணமாகி உள்ளது.

Source link