பந்தலூர் : பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்ட கிருஷ்ணன் மனைவிக்கு, நிரந்தர அரசு வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

பந்தலூர் : பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்ட கிருஷ்ணன் மனைவிக்கு, நிரந்தர அரசு வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. கிருஷ்ணன் குடும்பத்தினரின் வறுமை நிலை தொடர்பாக தினமலர் நாளிதழில் தொடர்ந்து வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியை சேர்ந்தவர் கிருஷ்ணன். ஆலு குறும்பா பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த இவர், சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளை இயற்கை முறையில் ஓவியமாக வரைந்துள்ளார்.

கிருஷ்ணன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். வரது ஓவியத்திறமையை கவுரவிக்கும் வகையில் மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்ட கிருஷ்ணன் மனைவி சுசிலா கல்லாறு பகுதியில், கூலி வேலை செய்து வருகிறார்.

குழந்தைகளுடன் வீடு வசதி இல்லாமல் குடிசையில் வாழும் இவர்களின் நிலை குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. இவர்களின் குடும்ப சூழல் குறித்து, நீலகிரி மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்தது.

அதனையடுத்து 5ம் வகுப்பு வரை படித்துள்ள, கிருஷ்ணன் மனைவி சுசிலாவிற்கு, 32 ஆயிரம் ரூபாய் மாத ஊதியத்தில், ஊட்டி எம்.பாலாடா பகுதியில் செயல்படும் ஏகலைவா மாதிரி பள்ளியில், தோட்டப்பணியாளர் நிரந்தர பணிக்கான, ஆணையினை சுசிலாவிடம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

அவருக்கு பள்ளி வளாகத்தில் அரசு குடியிருக்க வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜே. எஸ். எஸ். பார்மசி கல்லூரியில் படித்து வரும் இவரின் மூத்த மகள் வாசுகி முனைவர் பட்டம் வரை கட்டணம் இல்லாமல் படிப்பதற்கும், மகன் ராகுல், மகள் கீர்த்திகா ஆகியோருக்கும் விடுதி வசதியுடன் ஏகலைவா மாதிரி பள்ளியில் படிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுசீலா கூறுகையில், எனது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அரசு வேலை கிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு துணை நின்ற அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். எனக்கு வீட்டுமனை பட்டா மற்றும் வீடு வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் மேலும் பயனாக இருக்கும் என்றார்.

Source link