பனங்காட்டூர் ரேஷன் கடை விவகாரம்: பழைய கட்டிடத்திலேயே பொருட்கள் வழங்கக் கோரி பொதுமக்கள் வாக்குவாதம் – வட்டாட்சியர் பேச்சுவார்த்தை
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பனங்காட்டூர் கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில், பழைய கட்டிடத்திலேயே தொடர்ந்து பொருட்களை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பனங்காட்டூர் கிராமத்தில் 540-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு கடந்த 40 ஆண்டுகளாக அங்கிருந்த ஒரு பல்நோக்கு கட்டிடத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது அந்த கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து, மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து பொருட்கள் வீணாகும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, பனங்காட்டூர் அண்ணா நகர் பகுதியில் 13 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. நுகர்பொருள் வாணிப கழக ஒப்புதலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த புதிய கடை பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில், பழைய கட்டிடத்திற்கு அருகாமையில் வசிக்கும் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், தங்களுக்கு பழைய கட்டிடத்திலேயே பொருட்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். புதிய கடைக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு பணியில் இருந்த விற்பனையாளரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதிய கடையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்ததோடு, பணியாளரை அங்கிருந்து வெளியேறச் சொன்னதால் பதற்றமான சூழல் உருவானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போச்சம்பள்ளி வட்டாட்சியர் அருள், வட்ட வழங்கல் அலுவலர் ரஹமத்துல்லா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, “பழைய கட்டிடத்தின் அருகில் வசிக்கும் மக்களின் வசதிக்காக, மாதத்தில் ஒரு நாள் மட்டும் அங்கேயே பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் உறுதி அளித்தார். வட்டாட்சியரின் இந்த சமரசத்தை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பனங்காட்டூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கூட்டுறவு சார்பதிவாளர் ஆதிஸ்வரி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது சம்பந்தமாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுகுறித்து கிராம மக்கள் இடையே நேரடியாக தகவல் தெரிவித்துள்ளதாகவும் விரைந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு எடுக்கப்படும் என்று தகவல் தெரிவித்தார்.
