சென்னை: பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க, ‘பிரஹார்’ என்ற கொள்கையை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அல்- – குவைதா, ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும், ‘ஸ்லீப்பர் செல்’களை தீவிரமாக கண்காணிக்க, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத செயல்களை தடுத்தல், பதிலடி தருதல், அரசு இயந்திரங்களை ஒருங்கிணைத்தல், பயங்கரவாதத்திற்கான நிதி ஆதாரங்களை அழித்தல், சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைந்து, பயங்கரவாத செயல்களை ஒடுக்க அழுத்தம் தருதல் என, ஏழு முக்கிய அம்சங்களை, மத்திய உள்துறை அமைச்சகம் வரையறை செய்துள்ளது.
அதன் அடிப்படையில், ‘பிரஹார் என்ற பெயரில், பயங்கரவாதத்திற்கு எதிரான, நாட்டின் முதல் கொள்கையை, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ‘பிரஹார்’ என்றால், தமிழில் தாக்குதல் என அர்த்தம்.
இதுதொடர்பாக, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதம்:
சதித்திட்டங்களுக்கு ஆட்களை சேர்ப்பது, நிதி மற்றும் ஆயுதங்களை திரட்டுவது உள்ளிட்ட செயல்களில், பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, சமூக வலைதளங்களையே அதிகம் பயன்படுத்துகின்றன.
வெளிநாடுகளில் செயல்படும், அல் – குவைதா, ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புகள், ‘ஸ்லீப்பர் செல்’கள் எனும் ரகசிய பிரிவு வாயிலாக, தங்கள் அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதை தீவிரமாக கண்காணித்து முறியடிக்க வேண்டும். அதற்காக, மத்திய புலனாய்வு அமைப்புகளும், மாநில போலீசாரும் இணைந்து பணிபுரிய வேண்டும். பயங்கரவாத அமைப்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதுடன், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
