நடப்பாண்டு ஜனவரியில், பயணியர் கார் விற்பனை, இதுவரை இல்லாத வகையில், 12 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில், 3.87 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் 4.33 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஜனவரியில் அதிகம் விற்பனையான காராக நெக்சான் எஸ்.யூ.வி., உருவெடுத்துள்ளது. மொத்த விற்பனையை பொறுத்தவரை, மாருதி நிறுவனம் முதலிடத்தில் நீடிக்கிறது. இதன் விற்பனையில், பெரிய மாற்றம் இல்லை என்றாலும், ஏற்றுமதி 88 சதவீதம் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மொத்தம் 51,020 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இதுவரை இல்லாத வகையில், 70,222 கார்களை விற்பனை செய்து, மீண்டும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. புதிதாக அறிமுகமான சியரா, ஹேரியர், சபாரி மாடல்கள் இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
