திருச்சி: பயமா என்று எல்லாம் எனக்கு தெரியாது என தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதியில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் கே.என்.நேரு கூறியதாவது: தேர்தலில் யாரும் எங்கும் போட்டியிடுவதற்கு, அரசியல் சட்டத்தில் இடம் இருக்கிறது. அந்த வகையில் அவர் (விஜய்) திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். களத்தில் மக்கள் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று எங்களுக்கு தெரியும்.
எங்களது முழு நம்பிக்கை முதல்வர் ஸ்டாலினுக்கு தான் வாக்களிப்பார்கள் என்று தெரியும். அரசியலமைப்புச் சட்டத்தில் இரண்டு தொகுதியில் போட்டியிடலாம் என்று இருக்கிறது. அவர் இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறார். பயமா என்று எல்லாம் எனக்கு தெரியாது.
திருச்சி கிழக்கு தொகுதியை பொருத்தவரைக்கும், 1977ம் ஆண்டு தேர்தலிலேயே, திருச்சியில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத போது கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றோம். எனவே திருச்சி கிழக்கு தொகுதி திமுகவின் பக்கம் இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் இருக்கும் அறிவிப்புகளுக்கு நீங்கள் பாராட்டு தெரிவித்தாலே போதும். திமுகவின் தேர்தல் அறிக்கை களத்தில் கதாநாயகனாக இருந்து கொண்டிருக்கிறது. மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். மிகச்சிறந்த ஆட்சி அமைவதற்கு ஆதரவு அளிப்பார்கள். இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.
