பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடக்கும் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் பங்கேற்றது. போட்டி துவக்கத்தில் தேசிய கீதம் பாடாமல், ஈரான் வீராங்கனைகள் மவுனமாக நின்றனர். இதனால் நாடு திரும்ப அச்சப்பட்ட 6 வீராங்கனைகள், 1 பயிற்சியாளர் என 7 பேர் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்தனர். இதில் 4 வீராங்கனைகள் மனம் மாறி, மலேசியா திரும்பினர். மீதமுள்ள 2 வீராங்கனைகள், பிரிஸ்பேன் கிளப் அணியில் இணைந்தனர். சக கிளப் வீராங்கனைகளுடன் இணைந்து பயிற்சியை துவக்கினர்.
தென் ஆப்ரிக்கா அசத்தல்
ஹாமில்டன்: நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க பெண்கள் அணி ஐந்து போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. இரண்டாவது போட்டி ஹாமில்டனில் நடந்தது. முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 20 ஓவரில் 177/5 ரன் எடுத்தது. சுனே லஸ் (31), தஸ்மின் (53), கேப்டன் லாரா (41) உதவினர்.
நியூசிலாந்து அணி 19.1 ஓவரில் 159 ரன்னில் ஆல் அவுட்டாக, 18 ரன்னில் தோற்றது. தென் ஆப்ரிக்காவின் அயபோங்கா 4 விக்கெட் சாய்த்தார்.
டென்னிஸ் வீரருக்கு தடை
சிட்னி: ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் மரின்கோ மடோசெவிச் 40. உலகத் தரவரிசையில் 39வது இடத்தில் இருந்துள்ளார். இவர் கடந்த 2018-2020 என இடைப்பட்ட காலத்தில் ஊக்கமருந்து விதிகளை மீறியது தெரியவந்துள்ளது. துவக்கத்தில் இதை மறுத்தார். இது குறித்து சர்வதேச டென்னிஸ் ஒருங்கிணைப்பு ஏஜென்சி விசாரணையை துவக்கியது. பின் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டார். சோதனையில் சிக்காமல் இருப்பது எப்படி என சக வீரர்களுக்கு ஆலோசனை தந்துள்ளார். இவருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 2030 வரை எவ்வித போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.
எக்ஸ்டிராஸ்
* தென் ஆப்ரிக்க அணி முன்னாள் வீரர் டிவிலியர்ஸ் கூறுகையில்,” பிரிமியர் தொடரில் சென்னை அணி பேட்டிங் வரிசையில் தோனி 44, ‘டாப்-6’ இடத்திற்குள் களமிறங்க வேண்டும். இல்லையென்றால் மற்றவர்களுக்கு வழிவிட்டு, விலகி விட வேண்டும்,” என்றார்.
* மும்பையில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சசிக்குமார் முகுந்த், ஜெர்மனியின் வான் ஹெர்ஜீலேவை 7-5, 6-3 என வீழ்த்தினார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் அர்னவ் பிரபாகர், சித்தார்த், இஷாக் இக்பால் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
* இந்தியாவில் ‘ஐ-லீக்’ கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் ரியல் காஷ்மீர் அணி 0-1 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தான் யுனெடெட் அணியிடம் தோல்வியடைந்தது. இதுவரை ராஜஸ்தான் அணி 4 போட்டியில் (2 வெற்றி, தலா ஒரு தோல்வி, ‘டிரா’) 7 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
* கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் ‘சீனியர்’ மல்யுத்த சாம்பியன்ஷிப், ஏப்ரல் 6-12ல் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணித் தேர்வு முகாம் டில்லியில் நடந்தது. இதில் அமன் ஷெராவத் (61 கிலோ), சந்தீப் மான் (79), தினேஷ் (125), ஹன்சிகா (55), மணிஷா (57), மோனிகா (65) உள்ளிட்டோர் தேர்வாகினர்.
* தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இந்துாரில் நடந்தது. ஆண்கள் அணிகள் பிரிவில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் போர்டு அணி, பெண்கள் பிரிவில் ரிசர்வ் வங்கி அணி கோப்பை வென்றன.
