புதுடில்லி: ‘பயிற்சி பேராசிரியர்கள் நியமனத்தில் அதிகபட்ச பணியிடங்களை வைத்து தமிழகம் முதலிடத்தில் உள்ளது’ என, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் பல்கலை மானியக் குழுவின் கீழ், 56 மத்திய பல்கலைகள், 460 மாநில பல்கலைகள், 128 நிகர்நிலை பல்கலைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழ், 45,000க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் இயங்குகின்றன. இந்த கல்லுாரிகளில் தங்கள் துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்ற தொழில்துறை நிபுணர்கள் பயிற்சி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அறிவியல், தொழில்நுட்பம், ஊடகம் உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பயிற்சி பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். கல்வித் துறைக்கும், தொழில் துறைக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கவும், வகுப்பறை சூழல்களில் தொழில்முறை அனுபவங்களை வளர்க்கவும், இவர்கள் நியமிக்கப் படுகின்றனர்.
உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்சி பேராசிரியர்களை பணியமர்த்துவதற்கான வழிகாட்டுதல்களை பல்கலை மானியக் குழு, 2002ல் வெளியிட்டது.அதன் அடிப்படையில் நியமிக்கப்படும் பயிற்சி பேராசிரியர்கள், ஒரு நிறுவனத்தில் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை பணியாற்றலாம். தவிர்க்க முடியாத சூழலில், அவர்களின் பணிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும்.
இந்நிலையில், தமிழகத்தில் அதிகளவு பயிற்சி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து பல்கலை மானியக் குழு வெளியிட்டுள்ள தரவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் உள்ள 349 உயர்கல்வி நிறுவனங்களில், 1,841 பயிற்சி பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில், அதிகபட்சமாக தமிழகத்தில் 395 பேர் உள்ளனர்.
அடுத்ததாக மஹாராஷ்டிராவில் 193 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 179 பேரும், கர்நாடகாவில் 170 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தனியார் பல்கலைகளில் அதிகளவு பயிற்சி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய பல்கலைகளில், 15 பேர் மட்டுமே பயிற்சி பேராசிரியர்களாக உள்ளனர். இதற்கு நேர்மாறாக, நிகர்நிலை பல்கலைகளில் 699 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் பல்கலையில் 715 பேரும், மாநில பல்கலைக்கழகங்களில் 212 பேரும் பணியில் உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
