பரனிகா தேசிய சாதனை * உள்ளரங்கு போல் வால்ட்டில் தங்கம்

புவனேஸ்வர்: தேசிய உள்ளரங்கு தடகளத்தில் போல் வால்ட் போட்டியில் சாதனை படைத்தார் தமிழகத்தின் பரனிகா.

இந்தியாவில் முதன் முறையாக, தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப், நேற்று புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் துவங்கியது. பெண்களுக்கான போல் வால்ட் போட்டி நடந்தது. தமிழகத்தின் பரனிகா, 4.22 மீ., உயரம் தாவி, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கம் கைப்பற்றினார். இதற்கு முன் 2022ல் ரோசி மீனா, 4.21 மீ., உயரம் தாவி இருந்தார்.

கேரளாவின் பிளஸ்சி (3.95), மரியா (3.80) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். தவிர உள்ளரங்கு போட்டியில் பரனிகா செயல்பாடு, சிறப்பானதாக அமைந்தது. முன்னதாக 2017ல் வஹாரியா 4.02 மீ., உயரம் தாவி இருந்தார்.

பிரவீன் ‘வெள்ளி’

ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டி நடந்தது. தமிழகத்தின் ‘டிரிபிள் ஜம்ப்’ வீரர் பிரவின் சித்ரவேல் இதில் பங்கேற்றார். இவர், 7.78 மீ., தாண்டி, வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஒடிஷா வீரர் சாருண் (7.80) தங்கம், ரயில்வேஸ் அணியின் டேவிட் (7.69) வெண்கலம் வென்றனர்.

இரண்டு வெண்கலம்

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தமிழகத்தின் பாலாஜி (16.74 மீ.,) வெண்கலம் கைப்பற்றினார். பி.எஸ்.எப்., அணியின் ரவி குமார் (17.17), உத்தரகாண்ட்டின் ஆதிஷ் (16.92) தங்கம், வெள்ளி வென்றனர்.

20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் தமிழகத்தின் அக் ஷயா (11.89 மீ.,) வெண்கலப் பதக்கம் வென்றார். கேரளாவின் டோனா மரியா (13.35), ஹரியானாவின் குஷ்பூ (12.03) முதல் இரு இடம் பெற்றனர்.

Source link