பீஜிங்: உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், சீனா மற்றும் ரஷ்ய அதிபர்கள் நேற்று, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசினர். அப்போது, பொருளாதாரம் உட்பட பல துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு தொடரும் என, இரு அதிபர்களும் உறுதி செய்தனர்.
அமெரிக்கா பல நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்துள்ளது. இதையடுத்து, பல ஐரோப்பிய நாடுகளின் பார்வை தற்போது நம் அண்டை நாடான சீனா பக்கம் திரும்பியுள்ளது. பிரிட்டன், கனடா பிரதமர்கள் கடந்த மாதம் சீனாவுக்குச் சென்று வர்த்தக உறவு தொடர்பாக பேசினர். ஜெர்மன் பிரதமர் இம்மாத இறுதியில் செல்கிறார்.
ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலர் செர்ஜி ஷோய்கு சமீபத்தில் சீனாவுக்குச் சென்று, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங்க் யீயை சந்தித்து பேசினார்.
இந்த சூழ்நிலையில், சீன அதிபர் ஷீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று பேசினர்.
அப்போது, எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து இணைந்து செயல்படுவதை, இரு தலைவர்களும் உறுதி செய்தனர்.
