ரைசென்: பருவம் தவறி பெய்த மழையால் 2.49 லட்சம் ஹெக்டேர் ரபி பருவ பயிர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
எதிர்பாராமல் பெய்த மழையால் 2.49 லட்சம் ஹெக்டேர் ரபி பருவ பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை குறித்து கணக்கெடுப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி ஏப்., 8ம் தேதி வரை பெய்த மழை குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கோதுமை பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கடுத்து மாம்பழம் மற்றும் லிச்சி ஆகிய தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் அதிகாரிகளோடு ஒருங்கிணைந்து, பயிர் சேதத்தை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாநில அமைச்சர்களுடன் சேதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
