பறக்கும் விமானத்தில் இளைஞர் செய்த சம்பவம்; அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் இருந்து சனிக்கிழமை (28-03-26) இரவு 8.15 மணிக்கு வாரணாசிக்குச் செல்ல இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் உத்திர பிரதேசம் மாநிலம், மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அத்னன் என்பவரும் பயணித்தார். இந்த விமானம் புறப்பட்ட 15 நிமிடத்தில், அவர் தன இருக்கையில் இருந்து எழுந்து சென்று, விமானத்தின் எமெர்ஜென்சி கதவைத் திறக்க முயன்றார். இதனைக் கண்டு அதிர்ந்து போன விமானப் பணியாளர்கள், அவரை உடனடியாக தடுத்து நிறுத்தினர். 

சற்றே நிதானத்திற்கு வந்த அவர், இதைக் கழிவறை கதவு என்று நினைத்துத் திறக்க முயன்றதாகத் தெரிவித்தார். பின்பு,  மீண்டும் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தார். இதையடுத்து, அந்த விமானம் சுமார் 10.20 மணியளவில் வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது மறுபடியும் தன் இருக்கையில் இருந்து எழுந்து, அவர் மீண்டும் எமெர்ஜென்சி கதவைத் திறக்க முயன்றார். இதனைக் கண்டு மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான விமானப் பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.   

பின்பு, விமானிகளுக்கு இது குறித்து அவர்கள் தகவல் அளித்தனர். இதற்கிடையில், விமானத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால், விமானி விமானத்தைத் தரையிறக்காமல், மீண்டும் வானில் பறக்கச் செய்தார். பின்பு, 10.35 மணிக்கு விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளான பயணிகள் நிம்மதி பெரு மூச்சுவிட்டனர். அவர்கள் விமானிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றனர்.  இருப்பினும், சம்பவம் செய்து அனைவரையும் அலறவிட்ட அத்னனை, விமான பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “என்ன நடந்தது என்று தனக்கு எதுவும் தெரியவில்லை என்றும், தனக்குப் பேய் பிடித்திருப்பதாகவும் அதனால் தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் இல்லை” என்றும் அவர் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர்.  

Source link