தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பார்கள், பெட்டிக்கடைகளில் விடுமுறை நாட்களில் விற்பனை செய்யப்படும் மதுப் பாட்டில்களை போலிசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பறிமுதல் செய்த ஆயிரக்கணக்கான மது பாட்டில்களைக் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காலாவதியான மதுப்பாட்டில்களை போலீசார் அழித்துள்ளனர். அப்போது கடந்த சில வாரங்களுக்குள் பறிமுதல் செய்து வைத்திருந்த மதுப்பாட்டில்களையும் காலாவதியான கணக்கில் சேர்த்து அழித்துவிட்டதாகக் காவல் நிலைய எழுத்தர் ஜெயகுரு கூறியுள்ளார். இருப்பினும் அவர் மதுப்பாட்டில்களை வெளியில் பார் நடத்தும் நபரிடம் விற்பனை செய்துள்ளார்.
இதனையடுத்து காவல் நிலைய எழுத்தர் ஜெயகுரு, பறிமுதல் செய்து வைத்திருந்த சுமார் 300 மதுப்பாட்டில்களை பார் நடத்தும் நபர்களுக்கு விற்பனை செய்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்தது. இதனையடுத்து, எழுத்தர் ஜெயகுருவை 7ஆம் தேதி ஆயுதப்படைக்கு காவல் கண்காணிப்பாளர் மாற்றினார். இந்நிலையில் நேற்று இரவு எழுத்தர் ஜெயகுரு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் இருந்த மதுப்பாட்டில்களை பார் நடத்துபவர்களுக்குக் காவல் நிலைய எழுத்தரே விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
