இஸ்லாமாபாத்: பலுச் விடுதலை போராட்ட வீரர்கள் நடத்திய தாக்குதல்களில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, அங்கு பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையாக உள்ள பலுச் இன மக்களின் ஆயுதக் குழுவான பி.எல்.ஏ., எனப்படும் பலுச் விடுதலைப் போராட்ட வீரர்கள் அரசுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் .
இந்நிலையில், பி.எல்.ஏ., வீரர்கள் பலுசிஸ்தானில் மீண்டும் தாக்குதலை துவங்கியுள்ளனர்.
தொடர்ந்து 40 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு வன்முறை நீடிக்கிறது. ‘ஆப்பரேஷன் ஹெரோப்’ இரண்டாம் கட்டம் என்ற பெயரில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ஸ்டேஷன்கள், போலீஸ் வாகனங்கள், சிறைகள், அரசு அலுவலகங்களை குறிவைத்து துப்பாக்கி, வெடிகுண்டு தாக்குதல்கள் நட த்தப்பட்டுள்ளன.
அத்துடன் பெண்கள் உட்பட 11 பேர் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் பாகிஸ்தான் ராணுவம், போலீஸ், சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பி.எல்.ஏ., வீரர்கள் அறிவித்துள்ளனர். தங்கள் அமைப்பைச் சேர்ந்த 18 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், இதை பாக்., அரசு மறுத்துள்ளது. தாக்குதலை முறியடிக்க ராணுவம், போலீஸ் இணைந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், அதில் 145 பி.எல்.ஏ., வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இருதரப்பு இடையே நடந்த சண்டையில் பொதுமக்களில் ஐந்து பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 31 பேரும், பாதுகாப்புப்படை வீரர்கள் 17 பேரும் உயிரிழந்துள்ளதாக ராணுவ தரப்பு கூறியுள்ளது.
புன்னகைத்து உயிரிழந்த
தற்கொலைப்படை பெண்
தங்கள் தற்கொலைப்படையைச் சேர்ந்த பெண்ணான ஹவா பலுச், பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக எவ்வாறு தாக்குதல் நடத்திய பின், புன்னகையுடன் உயிரிழந்தார் என்பது தொடர்பான வீடியோவை பி.எல்.ஏ., அமைப்பு வெளியிட்டுள்ளது. அதிகாலை அல்லது இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஹவா பலுச் என்ற இளம் பெண், சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்துகிறார். எதிரிகளை அழிக்க நேரம் வந்துவிட்டது என்றும், பெண்கள் அனைவரும் இணைந்து போராட வருமாறும் கூறும் அவர் சில மணி நேரத்தில் உயிரிழந்து கிடக்கிறார். இறப்பிற்கு முன் அவர் தைரியத்துடனும், புன்னகையுடனும் இருந்ததாகக் கூறி பி.எல்.ஏ., அமைப்பு வீடியோ வெளியிட்டுள்ளது.
