பல்கலைக்கு நிலம் தந்தோரின் 40 ஆண்டுகால போராட்டம்; இழப்பீடு வழங்க அரசாணை

வடவள்ளி: பாரதியார் பல்கலைக்கு நிலம் வழங்கியவர்களின், 40 ஆண்டு கால போராட்டத்துக்கு பின், இழப்பீடு வழங்க, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தபோது, கோவை மாவட்டம், மருதமலை அடிவாரத்தில், பாரதியார் பல்கலை., அமைக்க, 1977 முதல் 1986 வரை, 1,150 பேரிடமிருந்து, 925.84 ஏக்கர் பட்டா நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் என, 1,072 ஏக்கர் நிலத்தை, அரசு கையகப்படுத்தியது.

இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால், நிலம் கொடுத்தவர்கள், கோவை நீதிமன்றத்தில், 19 வழக்குகள் தொடுத்தனர். 2007ம் ஆண்டு தீர்ப்பில், வட்டியுடன் சேர்த்து, 160 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில், கோவை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதற்கு பின்பும் முறையாக இழப்பீடு வழங்காததால், பல்கலைக்கு., நிலம் வழங்கியவர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், பல்கலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு, 164 கோடியே 28 லட்சத்து, 34 ஆயிரத்து 272 ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கான அரசாணையை, தமிழக அரசு நேற்று வெளியிட்டது. 40 ஆண்டு போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததால், பல்கலைக்கு நிலம் வழங்கியவர்கள் கூட்டமைப்பினர், கல்வீரம்பாளையத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கூட்டமைப்பு தலைவர் கணேஷன், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பத்மநாபன் கூறுகையில், ”40 ஆண்டுகளாக, மா.கம்யூ., போராடி வந்தது. தற்போது, 196 ஏக்கர் நிலத்தை, ‘டிட்கோ’வுக்கு கொடுத்து, அதன் வாயிலாக கிடைக்கும், 164 கோடியை இழப்பீடாக வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வட்டி தொகை, நாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவு. இருப்பினும், போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடுகிறோம்,” என்றார்.

Source link