பள்ளிகளில் சுற்றுச்சுவர் இடிந்தால் தலைமை ஆசிரியரே பொறுப்பு – அதிரடி உத்தரவு – school education department circular for monsoon precaution in tamilnadu

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பள்ளி கட்டிடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே தடுத்து மாணவர்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிகளில் உள்ள அனைத்து கட்டிடங்களின் மேற்கூரையின் ஸ்திரத்தன்மையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். மழைநீர் வடிகால் குழாய்களில் (Rainwater Drainage Pipes) அடைப்பு இருந்தால் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். மொட்டை மாடியில் எக்காரணம் கொண்டும் மழைநீர் தேங்க அனுமதிக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கைப்பிடிச் சுவர் (Parapet Walls) மற்றும் ஜன்னல், கதவுகளுக்கு மேல் உள்ள சன்ஷேடு (Sunshade) விரிசல் அடைந்துள்ளதா, பலவீனமாக உள்ளதா என ஆய்வு செய்து உடனடியாக பழுது நீக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

பள்ளிகளில் சுற்றுச்சுவர் பாதுகாப்பு (Compound Wall)

தொடர் மழையால் சுற்றுச்சுவர்கள் நிலத்தடி நீரினாலும், மழைநீரினாலும் அதிக ஈரப்பதத்துடன் காணப்படலாம் எனவும் அதனை தினசரி தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உறுதித்தன்மையற்ற, சேதமடைந்த, விரிசல் விழுந்த சுற்றுச்சுவர் கண்டறியப்பட்டால், மாணவர்கள் அருகில் செல்லாதவாறு முள்வேலி, தடுப்புகள் (Barricades) அல்லது எச்சரிக்கைப் பலகை அமைத்து உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சேதமடைந்த வகுப்பறைகளை திறக்கக் கூடாது

பள்ளி சுவர்கள், கூரைகளில் விரிசல், நீர்க்கசிவு காணப்பட்டால் அந்த கட்டிடங்களை மாணவர்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது. உடனடியாக பூட்டி சீல் வைக்க வேண்டும். தகுதி வாய்ந்த பொறியாளர் ‘பாதுகாப்பானது’ என எழுத்துப்பூர்வ சான்றிதழ் கொடுக்கும் வரை திறக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளியில் பயன்பாடற்ற பழைய கட்டிடங்கள்

பள்ளி வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற, பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்களை உடனடியாக அடையாளம் காண வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு போர்க்கால அடிப்படையில் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வத்துறை உத்தரவிட்டுள்ளது. பழைய கட்டிடங்களை இடிக்கும் வரை அந்த கட்டிடத்தின் 50 அடி சுற்றளவிற்கு மாணவர்கள் செல்லாத வகையில் தடுப்பு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் எச்சரிக்கை

ஆழமான குழிகள், வாய்க்கால்கள், பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான உயரமான தடுப்புகள் (Hard Barricades) அமைக்க வேண்டும். சிமெண்ட், செங்கல், கம்பிகள், மரக்கட்டைகள் போன்ற கட்டுமான பொருட்களை மாணவர்கள் கூடும் இடங்களில் வைக்கக்கூடாது. பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளி கிணறுகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் (Sump), மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், கழிவுநீர்த் தொட்டிகள் (Septic Tanks) அனைத்தும் உறுதியான கான்கிரீட் அல்லது இரும்பு மூடிகள் கொண்டு பூட்டப்பட்ட நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் (OHT) மற்றும் தாங்குதளங்களின் பலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக, அனைத்து வகை பள்ளிகளிலும் இந்த பாதுகாப்பு நெறிமுறைகள் 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என மூன்று இயக்குநர்களும் கூட்டாக உத்தரவிட்டுள்ளனர்

Source link