பள்ளியில் சாதிய வன்கொடுமை: மாணவன் தற்கொலை? – உரிய நடவடிக்கை எடுக்க பாஜக வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தல் – bjp vanathi srinivasan urges action for kovai school student suicide by caste issues

கோவையில் பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டார். பள்ளியில் மாணவருக்கு சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டதாகவும் இதனால், கவலையடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவர் அகிலனுக்கு பள்ளியில் சாதிய ரீதியில் பாகுபாடு பார்க்கப்பட்டு, அவருக்குத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை

கோவை பீளமேடு பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவன் அகிலன் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியரால் சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்கவில்லை?

சாதிகள் இல்லையடி பாப்பா என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் சமத்துவத்தைப் பயிற்றுவிக்கும் கல்விக் கூடங்களில் சாதிய வன்கொடுமை தலைதூக்கி ஆடுவதை இதுபோன்ற சம்பவங்கள் பிரதிபலிக்கிறது. மாணவர் அகிலன் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர் சமுதாயத்திற்கே ஆபத்து

பிறப்பால் ஒருவரை உயர்வு, தாழ்வாகக் கருதுவது தீண்டாமையின் உச்சம். அதுவும் கல்விக் கூடங்களில் தீண்டாமையும், சாதி வன்கொடுமையும் நுழைந்திருப்பது மாணவர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்களையே விதைக்கும் செயலாகும். சமீப காலங்களாகக் கல்விக் கூடங்களில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலப்பது போன்ற செய்திகளும், மாணவர்கள் ஆசிரியர்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வரும் வேளையில் தற்போது சாதி ரீதியிலான குற்றங்களும் உள்ளே நுழைந்திருப்பது மாணவர் சமுதாயத்திற்கே ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார்.

வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் ஒதுக்கி உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை, நன்னெறிக் கல்விக்கும் தனியாகப் பாடவேளைகளை ஒதுக்கிக் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோனை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மாணவர் அகிலன் விபரம்

கோவை பீளமேடு லால்பகதூர் காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் அசோக்குமார், கௌசல்யாதேவி. இத்தம்பதிக்கு நேத்ரா (19) என்ற மகளும், அகிலன் (15) என்ற மகனும் உள்ளனர். நேத்ரா கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், அகிலன் பள்ளியில் 11-ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.

மன உளைச்சலில் அகிலன்

இந்தச் சூழலில் அகிலன் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் தொடர்ந்து விடுமுறை எடுத்து வந்ததாகவும், பள்ளியில் சாதியப் பாகுபாடு காரணமாக மாணவர்கள் தன்னிடம் பேசுவதில்லை எனவும் வருத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலையில் வழக்கம்போல மாணவர் அகிலன் பள்ளிக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை

தொடர்ந்து அவரது தாய் பணிக்கும் புறப்பட்டுச் சென்று விட்டு, பின்னர் பிற்பகல் 1 மணியளவில் உணவருந்துவதற்காக வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் அகிலன் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு கதறி அழுதுள்ளார். உடனடியாக அவரை மீட்ட நிலையில், விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாணவர் அகிலன் அன்றைய தினம் பள்ளிக்குச் சென்றாரா என்பது குறித்தும், வகுப்பறையில் ஏற்பட்ட மனவருத்தத்தால் இந்த விபரீத முடிவை எடுத்தாரா என்பது குறித்தும் கௌசல்யாதேவி அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Source link