`பள்ளி மாணவர் மீது ஜாதிவெறி தாக்குதல்; இதுதான் சமூகநீதியா ஸ்டாலின் அவர்களே?' – இபிஎஸ் கண்டனம்

“இப்படி மாணவர்கள் இடையே ஜாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு? “- எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், கடந்த வாரம் (பிப்.19) 11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் சாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

 crime
crime

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தாக்குதல் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை வழக்கு பதியாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன. இது தான் சமூகநீதியா ஸ்டாலின் அவர்களே?

இந்த சம்பவமெல்லாம் எந்த மாடலில் வருகிறது? இப்படி மாணவர்கள் இடையே ஜாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு? பிரச்சார மேடை போட்டு தன் ஆட்சி பற்றி இல்லாத பெருமைகளை ரீல் ரீலாக அளந்து விடும் பொம்மை முதல்வர், ரியலாக நடக்கும் இந்த சமூக அநீதிகளைப் பற்றி ஒருவார்த்தை பேசினாரா? அல்லது, இனியாவது பேசுவாரா?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தன் கூட்டணி கட்சித் தலைவரே சுட்டிக்காட்டி இருக்கும் இந்த செய்திக்கு, தனது அரசின் நடவடிக்கையின்மைக்கு, என்ன விளக்கம் தரப்போகிறார் இந்த பொம்மை முதல்வர்? மாணவன் ஜீவானந்தம் தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழக மக்களே- சமத்துவ சமுதாயம் காணும் நாளே உண்மையான விடியல். இந்த விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, அந்த சமூகநீதி விடிவுகாலத்தை நோக்கி நாம் பயணிப்போம் ஒன்றாக!” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link