'பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறும்': மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி

பெங்களூரு: ‘பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர்கள் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இவற்றை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது’ என மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.


பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக் கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தெரிவித்ததாவது: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் மலர்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட அவகேடோ தற்போது இந்தியாவில் விளைவிக்க துவங்கப்பட்டுள்ளது.

இதே போன்று, டிராகன் புரூட் உற்பத்தியிலும் இந்தியா தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் அதிக லாபம் ஈட்டக்கூடிய பயிர்களைக் கண்டறிந்து, அவற்றை பயிரிட ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தக்காளி, சீதாப்பழம் போன்ற விளைபொருட்களின் வாழ்நாளை நீட்டிக்க தேவையான நடவடிக்கை எடுக்க ஆராய்ச்சி மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் நஷ்டமடைவது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு பாதிப்பில்லை

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில், இந்திய விவசாயிகளுக்கு சிறிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த பொருளும் சேர்க்கப்படவில்லை என சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம், இந்திய வேளாண் துறைக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது. விவசாயிகளின் நலனும், நாட்டின் நலனுமே முக்கியம் எனவும், பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இந்திய விவசாயிகளை உலக சந்தையுடன் இணைக்க தவறிவிட்டது எனவும் தெரிவித்தார்.

Source link