பழனிசாமிக்கு பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா: த.வெ.க., செங்கோட்டையன் கேள்வி

ஈரோடு: “முதல்வர் பதவி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவி ஆகியவற்றை நான் விட்டு கொடுத்தது, பழனிசாமிக்கு துரோகமாக தெரிகிறதா?” என்று த.வெ.க., நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.

ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் பிரசாரம் செய்த அவர் பேசியதாவது:

விஜயை ஆதரித்து, அவர் வாயிலாக முதல்வராகி, 5,000 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என பழனிசாமி நினைத்தார். அதற்கு நான் விடவில்லை என்பதால் என் மீது கொலைவெறியில் இருக்கிறார். அ.தி.மு.க.,வில் நான் இருந்தபோது, முதல்வர் பதவியையும், பொதுச்செயலர் பதவியையும் விட்டு கொடுத்தது, பழனிசாமிக்கு துரோகமாக தெரிகிறதா?

ஜெயலலிதா மறைந்ததும், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, இரண்டு பெயர்கள் தான் முன் நின்றன. ஒன்று நான், மற்றொன்று பழனிசாமி. அப்போது, ‘எனக்கு முதல்வர் பதவியை விட, கழகம் உடைந்துவிடக் கூடாது என்பதே முக்கியம்’ என நான் கூறி விட்டு, அனைவரும் இணைந்து பணியாற்ற வழிவகை செய்தேன்.

கட்சிக்காக உழைப்பவர்களையே நீக்குகின்றனர் என்றால், அதன் போக்கை நீங்களே பாருங்கள். பத்து முறை தோல்வி கண்ட பழனிசாமி, என்னை துரோகி என்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link