சென்னை: ”பழைய மக்கள் நலக் கூட்டணியை சேர்த்து, ஒட்டு போட்டு வைத்த உடைந்த கண்ணாடியாக தி.மு.க., கூட்டணி உள்ளது,” என த.வெ.க., தலைவர் விஜய் விமர்சித்தார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர்களை அறிவித்த பின், விஜய் பேசியதாவது:
நன்றிக்கடன் ஒரு எம்.எல்.ஏ., என்றால், கொள்ளை அடிப்பவர்களாகவும், சட்ட விரோத கல் குவாரி நடத்துபவர்களாகவும் இருக்கக்கூடாது; தொகுதிக்கான எல்லை பாதுகாவலர்களாக இருக்க வேண்டும்.
தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பலர் மீது திருட்டு, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் வழக்கு உள்ளது.
மன்னராட்சியில் இருந்து மக்களாட்சியை மீட்க, த.வெ.க., வேட்பாளர்களுக்கு தயவு செய்து ஓட்டு போடுங்கள்.
த.வெ.க.,வில் எம்.எல்.ஏ.,க்கள் வருவது, ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் எம்.எல்.ஏ., ஆவது போன்றது. இதை, ‘இதயத்தில் உங்கள் விஜய்; இல்லந்தோறும் நம் எம்.எல்.ஏ.,’ என்றும் சொல்லலாம்.
நீதியை வென்று எடுக்கவும், தமிழகத்தின் எதிர்காலத்துக்கும் ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். வசதியான வாழ்க்கையை துாக்கி போட்டுவிட்டு, அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு, நன்றிக்கடன் செலுத்தவே வந்துள்ளேன்.
ஜனநாயக போட்டி மக்களை நம்பி நான் எப்படி எல்லா வற்றையும் விட்டு வந்தேனோ, அதேபோல் வேட்பாளரையும் மக்களிடமே ஒப்படைக்கிறேன்.
நான்கு முனை போட்டி என உருட்டினாலும், மக்கள் கூட்டணியான த.வெ.க.,வுக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் தான் போட்டி. ஊழலை ஒழிக்க வந்தவர்களுக்கும், ஊழலில் ஊறிப்போனவர்களுக்குமான தேர்தல்.
சுருக்கமாக, விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் இடையே ஆரோக்கியமாக நடக்கும் ஜனநாயக போட்டி.
பழைய மக்கள் நலக் கூட்டணியை சேர்த்து, உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்ததுபோல், கிழிந்த துணியை தைத்தது போல், ஒட்டு போட்டு வைத்த கூட்டணியாக தி.மு.க., கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
