பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய கேமரா சீனாவில் வாங்கப்பட்டது: என்.ஐ.ஏ., விசாரணையில் புது தகவல்

புதுடில்லி: ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் கைப்பற்றப்பட்ட, ‘கோ புரோ’ கேமரா, தாக்குதல் நடப்பதற்கு முன்பாக, சீனாவில் செயல்பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, விசாரணைக்கு சீனாவின் உதவியை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு நாடியுள்ளது.

ஆதாரம்

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில், கடந்த ஆண்டு ஏப்., 22ம் தேதி குழுமியிருந்த சுற்றுலா பயணியரை லஷ்கர் – இ – தொய்பாவின் நிழல் அமைப்பான, ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

குறிப்பாக ஹிந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 26 பேர் உயிரிழந்தது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில், என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு ‘கோ புரோ’ என்ற நவீன கேமரா முக்கிய ஆதாரமாக கிடைத்தது.

இதை ஆய்வு செய்தபோது, பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன், சீனாவில் அந்த கேமரா இயக்கப்பட்டது தெரிந்தது. தாக்குதலுக்கு முன்பாக உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும், இந்த கேமரா பற்றிய புலனாய்வு மூலம் பயங்கரவாதிகள் எப்படி இந்த தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டினார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும் என நம்புகின்றனர்.

கடிதம்

எனவே, இந்த கேமரா குறித்து கூடுதல் தகவல்களை பெற சீனாவின் உதவியை என்.ஐ.ஏ., அதிகாரிகள் நாடியுள்ளனர்.

ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இந்த கேமரா குறித்த தகவல்களை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். அதில், 2024, ஜன.,30ல் தான் சீனாவின் டாங்குவான் என்ற இடத்தில் இந்த கேமரா முதன் முதலாக இயக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

சீனாவில் இருந்த அந்த கேமரா பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வசம் எப்படி வந்தது, அதற்கு முன்பாக அதை பயன்படுத்தியது யார்? பணம் கொடுத்து வாங்கியது யார்? போன்ற தகவல்களை கேட்டு, சீனாவுக்கு என்.ஐ.ஏ., தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கேமரா மூலம் தாக்குதலை செயல்படுத்தியது, திட்டம் தீட்டியது ஆகியவற்றை நிரூபிக்க முடியும் எனவும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்தியா – சீனா இடையே பரஸ்பர சட்ட உதவி கோரும் உடன்பாடு நிறைவேற்றப்படவில்லை. எனினும் நாடு கடந்த திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான தகவல்களை ஐக்கிய நாடுகள் மாநாட்டின் விதியின் கீழ், இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள முடியும்.

Source link