பஹல்காம் வழியில் சீரமைப்புப் பணிகள்

பால்டால் பாதையில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளப்படும் 

பஹல்காம் வழித்தடத்திலான அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக காஷ்மீர் அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்திய மழையின் காரணமாக பஹல்காம் வழியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காஷ்மீர் கோட்ட ஆணையர் தெரிவித்தார்.

யாத்திரை தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காக, பக்தர்கள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் பயணிக்க பால்டால் பாதையில் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குஜராத்தில் கனமழைக்கு கடந்த 2 நாட்களில் 35 பேர் பலி 

குஜராத்தில் கனமழைக்கு கடந்த இரண்டு நாட்களில் 35 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மிக மோசமாக பாதிக்கப்பட்ட நவ்சாரி, வல்சாத் மாவட்டங்களில் மட்டும் 29 பேர் பலியாகியுள்ளனர்.

இதில், பெரும்பாலான உயிரிழப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலேயே ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 7,000க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி அறிவிப்பு 

சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை 25-ல் இருந்து 21- ஆக குறைக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்ற, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தெலங்கானா சட்டப்பேரவை மற்றும் மேலவையில் சிறப்புக் கூட்டம் கூட்டவுள்ளதாக அம்மாநில முதல்வர் ரேவந்த ரெட்டி அறிவித்துள்ளார்.

21 வயதுடையவர்கள் ஏற்கனவே ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாகவும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களாகவும் இருக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் ஏன் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பினார்.

Source link