இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், போலி சான்றிதழ் சமர்ப்பித்து உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர், தாரிக் மெஹ்மூத் ஜஹாங்கிரி. இவர், 2020ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
தேர்வில் மோசடி
கராச்சி பல்கலையில், 1988ல் வழக்கறிஞருக்கு படித்ததாகக் கூறிய ஜஹாங்கிரி, மோசடி வழிகளில் பட்டத்தைப் பெற்றது நீதிமன்ற ஆய்வில் தெரிய வந்தது.
தேர்வின்போது மோசடி செய்ததாக பிடிபட்ட அவருக்கு 1989ல் பல்கலைக்கழகம், 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதித்தது.
ஆனால் இந்த தடையை மீறி, வேண்டுமென்றே மோசடி செய்து, வேறொரு மாணவரின் சேர்க்கை எண்ணை வைத்து, ஜஹாங்கிரி, 1990ல் தேர்வில் எழுதியுள்ளார்.
பல்கலையின் அசல் ஆவணங்கள், பதிவாளர் சமர்ப்பித்த ஆதாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த நீதிமன்றம், அவரது கல்வி சான்றிதழ்கள் மோசடி என கண்டு பிடித்தது.
இதை தொடர்ந்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சர்தார் முகமது சர்ப்ராஸ் தலைமையிலான அமர்வு, மெஹ்மூத் ஜஹாங்கிரியின் நியமனம் செல்லாது என்று 116 பக்க தீர்ப்பு வழங்கி, அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு செல்லாது
மேலும், ஜஹாங்கிரியின் பட்டம் ஆரம்பம் முதலே செல்லாது என்றும் அறிவித்தது.
இதனால் 5 ஆண்டுகள் அவர் நீதிமன்றத்தில் அமர்ந்து பல வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தும் சட்டரீதியாக செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பாகிஸ்தான் நீதித்துறை வரலாற்றில் மிக அரிதான, மிகுந்த அதிர்ச்சி தரும் சம்பவமாக கருதப்படுகிறது.
