இஸ்லாமாபாத்: பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், 2018 – 22 வரை பிரதமராக இருந்தார். 2022 ஏப்ரலில் அவர் பதவி இழந்தார்.
ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என, 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது பதியப்பட்டன. 2023 ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரை அவரது வழக்கறிஞர் சமீபத்தில் சந்தித்து பேசினார். தொடர்ந்து பாக்., உச்ச நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை அவர் தாக்கல் செய்துள்ளார்.
அதில் ‘ ரத்த உறைவு காரணமாக இம்ரான் கான் வலது கண்ணில் 15 சதவீத பார்வை மட்டுமே உள்ளது. சிறை அதிகாரிகள் அலட்சியத்தால் அவரது, 85 சதவீத பார்வை நிரந்தரமாக பறிபோயுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிடி தலைமையிலான அமர்வு, இம்ரான் கானின் உடல்நிலையை மதிப்பீடு செய்ய குழு அமைக்க உத்தரவிட்டது. பிப்.,16க்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
