லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும், ‘தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், பாகிஸ்தானின் அப்ரார் அஹமதை, சன்ரைசஸ் அணி உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். இதனை கிரிக்கெட் ரசிகர்கள், சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவில் நடைபெறும் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 2009ம் ஆண்டுக்குப்பின், பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது. இதற்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது.
அதன்பின், இந்தியா – பாகிஸ்தான் மோதிய சர்வதேச போட்டிகளின் போது, பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்க கூட, இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர். சமீபத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை அது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அப்ரார் அஹமத் என்ற பாகிஸ்தான் வீரரை, சன்ரைசஸ் உரிமையாளர்கள் வாங்கியுள்ளது, கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
‘தி ஹண்ரட்’
இங்கிலாந்தில் நடைபெறும் ‘தி ஹண்ரட்’ தொடருக்கான, வீரர்கள் ஏலம், இன்று நடந்தது. இந்த ஏலத்தில், சர்வதேச வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், சன் குழுமத்திற்கு சொந்தமான, சன்ரைசஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹமது என்பவரை, 2.34 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர் ஒருவரை, பிற அணிகளுடன் போட்டி போட்டு, கோடிகளை கொட்டிக் கொடுத்து, சன் குழுமம் வாங்கியது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
