– டில்லி சிறப்பு நிருபர் -:
‘ரயில் பயணத்தின் போது வழங்கப்படும் விபத்து காப்பீடு, ‘ஆன்லைன்’ வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைப்பது சமத்துவத்திற்கு எதிரானது. ‘கவுன்ட்டர்’களில் நேரடியாக டிக்கெட் வாங்குபவர்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராதா யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ‘ரயில்வேயில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியருக்கு, குறைவான கட்டணத்தில் பயணக் காப்பீடு வழங்கப்படுகிறது.
‘ஆனால், ரயில் நிலைய கவுன்ட்டர்களில் நேரடியாக டிக்கெட் வாங்கும் லட்சக்கணக்கான பயணியருக்கு இந்த வசதி வழங்கப்படுவதில்லை. இது சமநிலையின்மையை காட்டுகிறது.
‘இது தொடர்பாக உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ என, கோரப்பட்டு இருந்தது.
விசாரணை
இந்த மனு மீதான விசாரணை ஏற்கனவே நடந்தபோது, ரயில்வே துறையின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. இதற்கிடையே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசானுதின் அமானுல்லா, மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டு இருந்த மூத்த வழக்கறிஞர், ‘இந்த விவகாரத்தில் ரயில்வே துறை எந்த ஒரு சாதகமான முடிவையும் தெரிவிக்கவில்லை’ என, தகவல் தெரிவித்தார்.
தடை
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பயணியர் டிக்கெட்டை ஆன்லைனில் வாங்குகின்றனரா அல்லது கவுன்ட்டரில் வாங்குகின்றனரா என்பதில் பாகுபாடு காட்ட முடியாது. பயணக் காப்பீடு என்பது ஒரு சிலருக்கு மட்டும் இருக்கக் கூடாது.
கவுன்ட்டரில் டிக்கெட் வாங்கும் பயணியருக்கும் இந்த காப்பீடு வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
காப்பீடுக்கான கட்டணத்தை டிக்கெட் கவுன்ட்டர்களில் வசூலிப்பது மற்றும் விபரங்களைப் பதிவு செய்வதில் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளதாக கூறும் ரயில்வே தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. நவீன காலத்தில் இது ஒரு பெரிய தடையாக இருக்க முடியாது.
உங்களை நம்பி தான் ஒரு பயணி ரயில் பயணத்தை மேற்கொள்கின்றார். அப்படியிருக்கையில், அவருக்கு விபத்து காப்பீடு முதல் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது வரை அனைத்துக்குமே ரயில்வே நிர்வாகம் தான் பொறுப்பு.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
