பாகு: ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதல், 6வது நாளாக தொடர்கிறது. அஜர்பைஜானில் டிரோன்களை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் விமான நிலையம் சேதம் அடைந்ததுடன், அப்பாவி மக்கள் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து அஜர்பைஜான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரான் பகுதியில் இருந்து இன்று அதிகாலை அஜர்பைஜானின் நக்சிவன் பகுதியை நோக்கி டிரோன்கள் வீசப்பட்டன. ஒன்று விமான நிலையப்பகுதயில் விழுந்து சேத்தை ஏற்படுத்தியது. மற்றொன்று ஷகராபாத் கிராமத்தில் பள்ளி கட்டடம் அருகே விழுந்ததில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அஜர்பைஜான் மீதான தாக்குதல் சர்வதேச விதிகளை மீறிவதுடன் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளது. இது குறித்து ஈரான் விளக்கம் அளிப்பதுடன், முறையான விசாரணை நடத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு பதிலடி கொடுக்க அஜர்பைஜானுக்கு முழு உரிமை உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அஜர்பைஜானுக்காக ஈரான் தூதரை வரவழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.
கத்தார்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. தோஹாவில் அமெரிக்க தூதரகம் நோக்கி ஏவுகணைகளை வீசியது. ஆனால், வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் அதனை இடைமறித்து தாக்கி அழித்துவிட்டதாக கத்தார் கூறியுள்ளது.
இதனிடையே, ஈரான் அனுப்பிய பாலிஸ்டிக் ஏவுகணைகைள தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
துருக்கியும் தங்கள் நாட்டின் மீது ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அதை வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அபுதாபி விமான நிலையத்தில் குறிப்பிட்ட விமான சேவைகள் துவங்கி உள்ளதாக ஏடி மீடியா அலுவலகம் தெரிவித்துள்ளது.
