பாக்தாத்: ஈராக்கில் அமெரிக்க போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பிய விமானம் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் 14வது நாளை எட்டியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போர் நிற்பதற்கான எந்த வழிகளும் தென்படவில்லை.
இந்நிலையில், ஈரானில் தாக்குதல் நடத்தும் போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
ஈராக்கில், கேசி-135 ரக விமானமானது நடுவானில் போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பிய நிலையில் தொடர்பை இழந்தது. அந்த விமானத்தில் 6 பேர் இருந்தனர். உடனடியாக தேடும் பணி நடந்த நிலையில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மீட்கப்பட்டனர். இதனை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. அதேநேரத்தில் இந்த விமானத்தை யாரும் சுட்டு வீழ்த்தவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. போர் விமானம் பத்திரமாக குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கியது.
ஈரான் மீதான போரில் இதுவரை அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது உயிரிழந்தவர்களையும் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 11 ஐ கடந்துள்ளது.
