சண்டிகர்: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுவின் சதி திட்டத்தை முறியடித்த பஞ்சாப் போலீசார், இதில் தொடர்புடைய மூவரை கைது செய்தனர்.
நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள போலீஸ் நிலையங்களை தாக்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுவினர் திட்டமிட்டிருப்பதாக, பஞ்சாப் போலீசின் உளவு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து செயல்பட்ட பஞ்சாப் போலீசார், பயங்கரவாதிகளின் சதி திட்டத்தை முறியடித்தனர். சதி திட்டம் தீட்டிய பஞ்சாபின் தர்ன் தரண் மாவட்டத்தை சேர்ந்த சரப்ஜித் சிங், அமிர்தசரசை சேர்ந்த பிக்ரம்ஜித் சிங் மற்றும் அமன்தீப் சிங் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு கையெறி குண்டுகள் மற்றும் ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப் பட்டன.
இது குறித்து பஞ்சாப் போலீஸ் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது: பறிமுதல் செய்யப்பட்ட கையெறி குண்டுகளில் பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலையின் குறியீடுகள் உள்ளன. பல்வேறு மாநிலங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களை வெடிகுண்டுகள் வைத்து தாக்கும் சதி திட்டத்தை முறியடித்துள்ளோம்.
இந்த சதி செயலில் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட பிக்ரம்ஜித் சிங் குஜராத்தின் டீசா பகுதியில் இருந்து பாகிஸ்தான் உளவு அமைப்பினருடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
