கராச்சி: ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்களையும், அப்பாவி மக்களையும் கொன்ற அமெரிக்க அரசை கண்டித்து, அந்நாட்டின் துணை துாதரகம் அமைந்துள்ள பாகிஸ்தானின் கராச்சியில், ஈரான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அப்போது வன்முறையில் ஈடுபட்டோர் மீது அமெரிக்க படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 10 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
இதில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலை கண்டித்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தை, ஷியா முஸ்லிம் பிரிவினர் முற்றுகையிட முயன்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைத்தனர்.
எனினும், சிலர் துணை துாதரக வளாகத்திற்குள் நுழைந்து கட்டடத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர், இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அமெரிக்க படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 10 பேர் பலியாகினர்; 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்ததால், பதற்றமான சூழல் நிலவியது. இதனால் முக்கிய சாலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பாகி ஸ்தானின் வடக்கு நகரமான ஸ்கார்டுவில், ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கும் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள ஐ.நா., சபையின் அலுவலகக் கட்டடத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்தச் சம்பவத்தில், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதேபோல் ஈரானின் உச்ச தலைவர் கமேனிக்கு பல நகரங்களில் மக்கள் கூடி இரங்கல் தெரிவித்தனர். லாகூரில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர். எனினும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
