கேரள மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல் 9 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, கேரளத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் போன்ற கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கும், இடது ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாகக் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரளா சட்டமன்ற தேர்தல் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், ” எனது முழு கவனமும் கேரள மாநில தேர்தல் மீது தான் உள்ளது. அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள எனது சகாக்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நான் இங்குத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறேன். கேரளத்தைப் பொறுத்தவரை மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். எனவே, கேரளத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும்.
இந்த சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையில் தான் போட்டி. எனவே, இங்கு பாஜகவுக்கு அளிக்கும் வாக்குகள் என்பது வீணான வாக்குகள் தான். அதனால் எந்த பலனும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கேரளத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று இடதுசாரி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த முறை கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றக் காங்கிரஸ் தீவிரமாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
